குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் இழப்பு!

ஐம்புலன்களில் எந்தப் புலன் வேலை செய்யவில்லை என்றாலும் வாழ்க்கை நடத்துவது கஷ்டம் தான். காது கேளாமை என்பது ஒரே ஒரு குறைபாடு அல்ல. அதுவும் சின்னஞ்சிறு குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப் பட்டால் அவர்களது பேசும் திறமையும், மொழி அறிவும் பாதிக்கப்படும்.

 

குழந்தைகள் நாம் பேசுவதைக் கேட்டுக் கேட்டுத்தான் மொழி அறிவு பெறுகிறார்கள், பேசப் பழகுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.வளர்ந்த நாடுகளில் இந்தக் காது கேளாமை ஒரு பிறவிக் கோளாறாக இருக்கிறது; 1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்குக் காது கேட்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தையால் பேச முடியாததால், குழந்தைக்கு  இந்தக் குறை இருப்பது குழந்தை பிறந்த உடனே மருத்துவருக்கோ அல்லது பெற்றோருக்கோ தெரிய வருவதில்லை.

 

தாய் பாடும் தாலாட்டையோ, ஒரு நர்சரி ரைம்சையோ  கேட்க இயலாத குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பேச்சுக் குறைபாடும் உண்டாகும்.காது கேளாமை என்பது வெளியே தெரியக் கூடிய குறை இல்லை. ஆதலால் உங்கள் குழந்தையின் கேட்கும் திறனை, குழந்தை பிறந்த உடனே சோதிப்பது நல்லது. எத்தனை சீக்கிரமாக குறை பாடு தெரிய வருகிறதோ அத்தனை சீக்கிரமாக குறைபாடு நீக்க வழியும் தேடலாம்.

 

குழந்தை பிறந்த பின், மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்கு முன் குழந்தையின் கேட்கும் திறனை சோதிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் 4000   குழந்தைகள் இந்தக் குறைபாடுடன் பிறப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படிப் பிறக்கும் குழந்தைகள் மற்றபடி ஆரோக்கியமாக இருக்கிறார்கள். உங்கள் குழந்தையின் கேட்கும் திறன் சரியாக உள்ளதா என்பதை பரிசோதிப்பது உங்கள் கடமை.

 

குழந்தையின் பேச்சுத் திறனுக்கும், மொழித் திறமைக்கும் குழந்தை பிறந்த முதல் வருடம் மிக மிக முக்கியமானது. கேட்கும் திறன் என்பது குழந்தையின் சமூக வாழ்க்கைக்கும், அறிவார்ந்த வளர்ச்சிக்கும் மிக மிக அவசியம்.

 

2007 மற்றும்  2010 நடந்த ஆய்வறிக்கைகளின் நோக்கங்கள்:

ஒவ்வொரு குழந்தையும் கேட்கும் திறனுக்காக முதல் ஒரு மாதத்திலேயே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு வேளை கேட்கும் திறன் இல்லை என்றால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது மற்றும் எந்த வகை காது கேளாமை என்பதையும் முதல் மூன்று மாதத்திற்குள் கண்டறியப் பட வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்குள் கேட்கும்  திறனைப் பெற குழந்தைக்கேற்ற ஒரு திட்டத்தை தேர்ந்து எடுத்து, அதற்கான எல்லா உதவிகளும் செய்து கொடுக்கப் பட வேண்டும். இவை மூன்றும் 1-3-6 நெறிமுறை ( protocol )என்று சொல்லப் படுகிறது.

 

பிறந்த குழந்தையின் கேட்கும் திறனை அறிய உதவும் சோதனைகள்:

இரண்டு வகையான பரி சோதனைகள்  பச்சிளம் குழந்தைகளின் கேட்கும் திறனை அறிய உதவுகின்றன. இரண்டுமே மிக மிக பாதுகாப்பானவை. சில நிமிடங்களில் செய்து முடிக்கப் படுபவை. குழந்தைகளுக்கு இந்த பரிசோதனைகளினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெரும்பாலும் குழந்தைகள் இந்த பரிசோதனைகளின் போது உறங்கிக் கொண்டு இருப்பார்கள்.

 

முதல் நிலைப் பரிசோதனை:  Otoacoustic Emission டெஸ்ட்:

குழந்தையின் உட்காதுகளுக்குள் வெளிப்புற சத்தத்தினால் ஏற்படும்  சின்ன சின்ன அதிர்வுகள்மிக நுண்ணிய ஒலிவாங்கி மூலம் அளக்கப் படுகின்றன. இந்த அதிர்வுகள் ஒரு கணணிக்குள் செலுத்தப்பட்டு குழந்தையின் கேட்கும் திறன் கண்டறியப் படுகிறது.

 

இரண்டாம் நிலை பரிசோதனை: ABR  (Auditory Brainstem Response) இந்தப் பரிசோதனை குழந்தையின் மெல்லிய சத்தங்களைக் கேட்கும் திறனை அறிய உதவுகிறது. குழந்தையின் காதுகளில் மிகச் சிறிய செவிப் பொறி ( ear phone ) மூலம் ஊக்கச் சொடுக்கல் (click stimulus ) செலுத்தப் படுகிறது. இது ஆறு மாதத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு செய்யப்படும் பரிசோதனை.

 

சில சமயங்களில் குழந்தை விழித்துக்கொண்டோ, விளையாடிக் கொண்டோ இருந்தால் இந்தப் பரிசோதனைகளின் முடிவு சரியாக இல்லாமல் போகலாம். திரும்பவும் இப்பரி சோதனைகளைச் செய்ய வேண்டி வரும்.

 

உங்கள் வீட்டில் யாருக்கேனும் காது கேளாமைக் குறைபாடு இருந்தால் உங்கள் குழந்தையின் காது கேட்கும் திறனை ஒவ்வொரு வருடமும் சோதிப்பது நல்லது. குழந்தை பேசுவதில், அல்லது மொழியை கற்றுக் கொள்ளுவதில் பிரச்சினை இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

 

ஹியரிங் எய்ட் தவிர உட்காதுகளில் பொருத்தப் படும் உள்வைப்பு சாதனங்கள்  (implants ), பேச்சு சிகிச்சை (speech therapy ), செவிப் புலப் பயிற்சி (auditory training ) என்று பல விதங்களில் குழந்தையின் கேட்கும் திறனையும் மொழி கற்கும் திறனையும் மேம் படச் செய்யலாம்.

 

மருத்துவத் துறை இப்போது பல வகையில் முன்னேறி இருக்கிறது. உலகின் பல நாடுகளில் வெவ்வேறு விதமான ஆராய்ச்சிகள்  மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் நடந்து வருகின்றன. பிறவிக் கோளாறுகளே இல்லாமல் குழந்தைகள் பிற்காலத்தில் பிறக்கவும் கூடும் என்ற நிலையும் வரலாம்.

 

எந்த ஒரு குறை பாடும் ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டால் தீர்வு காணுவதும் எளிது. குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் காது கேளாமை குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டால் செயற்கை கருவிகள் மூலம் கேட்கும் திறனை சரி செய்யலாம். குறைபாடு சீக்கிரம் கண்டு பிடிக்கப் பட்டு சிகிச்சையும் அளிக்கப் பட்டால் குழந்தையின் வாழ்வை அழகாக மலரச் செய்யலாம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s