Uncategorized

வாலண்டைன்ஸ் டே

இன்று வாலண்டைன்ஸ் டே. இளம் காதலர்களுக்கு வாழ்த்துக்கள்!

காதல் என்பது இரு நெஞ்சங்கள் இணைந்து, பகிர்ந்துகொள்ளளும் ஒரு உணர்வு. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் என்பது இதன் முக்கிய அங்கம். ஒருவரையொருவர் அப்படியே குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதல் அடுத்த கட்டம். குறைகளை தன் மனம் கவர்ந்தவளுக்காக அல்லது ‘வனுக்காக’ மாற்றிக் கொள்ள முயலலாம். அல்லது நிறைவை நிறைவாக நினைத்துக் குறைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்யலாம். எதானாலும் உனக்காக நான், எனக்காக நீ, என்று வாழ்வாங்கு வாழலாம்.

நம் இதிகாச புராணங்கள் பல காதல் கதைகளைச் சொல்லுகின்றன. ஸ்ரீ ராமாயணத்தில் பட்டாபிஷேக காட்சி. பட்டாபிஷேகம் நல்லபடியாக நடந்தேறியது. எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்தாகிவிட்டது; அனுமனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீதைக்கு அவா. இராமபிரானைப் பற்றிய செய்தி கொண்டுவந்து உயிர் காத்த உத்தமன் அல்லவா அனுமன்? சிந்தனை வயப்பட்டவளாய் இராமனைப் பார்க்கிறாள் சீதை; இராமனும் கண்களாலேயே உத்திரவு கொடுக்கிறான். தன் கழுத்தில் இருந்த மணி மாலை கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறாள் சீதை. பார்வையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் இராமனுக்கும் சீதைக்கும் இருந்தது.

மலரின் மணம் போல, தேனின் சுவை போல இருக்க வேண்டும் காதல். ஆனால் இப்போது நாம் கேள்விப் படும் காதல் என்பதன் பொருளே வேறு மாதிரி ஆகிவிட்டது. இந்த நாளைப் பற்றி நினைக்கும்போது எனக்கு மறைந்த நடிகர் சந்திர பாபுவின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“காதல் என்பது எதுவரை? கல்யாணக் காலம் வரும்வரை…”

அவர் காலத்திலேயே இப்படி என்றால் இப்போது கேட்கவே வேண்டாம்!

“ஏங்க, காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை முதலிய படங்களை நீங்கள் பார்த்ததில்லையா?” என்று கேட்கிறீர்களா? அந்தப் படங்கள் என்னவோ வெற்றிப் படங்கள் தான்; மக்களும் கூட்டம்கூட்டமாக போய்ப் பார்த்தார்கள்; ஆனால் இப்படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எத்தனை பேர் பின்பற்றினார்கள்?

காதல், காதல், காதல், காதல் இல்லையேல், சாதல் என்றார் பாரதியார்

மனிதனின் வாழ்வில் காதல் என்னும் அன்பு இல்லை என்றால் அவனது வாழ்வு அர்த்தம் இல்லாதது; கிட்டத்தட்ட உயிரில்லாதவனைப் போன்றவன் அவன் என்று இதற்கு நாம் பொருள் கொள்ளலாம். ஆனால் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் காதலிப்பதும் காதலில் தோல்வி என்றாலோ  அல்லது பெற்றோர்கள் இதுபற்றி தெரிந்து கோபித்துக் கொண்டாலோ உடனே தூக்கில் தொங்குவதும், விஷம் குடித்து உயிரை விடுவதும்…. காதலைப் பற்றிய எண்ணமே மாறிவிடுகிறது, இல்லையா?

சரி இப்போது ஒரு கதை.. காதல் கதைதாங்க! ஒரு இணைய தளத்தில்     (பி)படித்தது.

வெகு காலத்திற்கு முன், மகத தேசத்தில் அகல்யா என்றொரு அழகான பெண் இருந்தாள். அரசனுக்கு அவள் மேல் ஆசை. ஆனால் அவளுக்கோ இந்திரன் என்கிற இளைஞன் மேல் ஆசை; அவனுக்கும் அப்படியே. எத்தனையோ ரகசியாமாக வைத்திருந்தும் ஒரு நாள் அரசனுக்கு அவர்களின் காதல் தெரிந்து விடுகிறது. தனக்கு அகல்யா கிடைக்காத கோபத்தை அவர்கள் இருவரையும் தண்டிப்பதில் தீர்த்துக் கொண்டான்.

முதலில் அவர்கள் இருவரையும் பனிக் காலத்தில் எலும்புகளை உறைய வைக்கும் நீரில் தள்ளினான். காதலில் மூழ்கி இருந்த அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“நீ எத்தனை கடுமையாக தண்டித்தாலும், நாங்கள் எங்களைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பதால், உடல் துன்பம் பெரிதாகத் தெரியவில்லை”. என்றனர்.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் இருவரையும் போட்டான்; “எங்களைப் பற்றிய தியானத்தில் ஆழ்ந்து விட்டோம்; வலியை உணரவில்லை” என்றனர்.

யானையின் கால்களில் இருவரையும் கட்டி யானையை ஓட விட்டான். “இருவருக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு, எல்லையில்லா ஆனந்தத்தை தருகிறது; உடல் துன்பம் பெரிதல்ல” என்றனர்.

சாட்டையால் அடித்தும் இரும்புக் கம்பிகளால் உடல் முழுவதும் துளைத்தும் இன்னும் எப்படி எப்படியோ துன்புறுத்தியும், அரசன் தான் அசந்து போனானே ஒழிய இளம் காதலர்கள் அயரவே இல்லை. “நீ கொடுத்த தண்டனை எல்லாம் எங்கள் உடலைத்தான் பதம் பார்த்தன; எங்கள் காதலை அல்ல” என்று சொன்னார்கள்.

வேறு வழி தெரியாத அரசன் பாரத முனிவரிடம் அந்தக் காதலர்களை அவரது சாபத்தால் அழியும்படி செய்தான். உடல்கள் தான் அழிந்ததே தவிர உள்ளமோ, ஆத்மாவோ அல்ல.

அகல்யாவும், இந்திரனும் முதலில் பின்னிப்பிணைந்த புழுக்களாக பிறந்தனர். பின்பு முத்தமிடும் மீன்களாகப் பிறவி எடுத்தனர். அடுத்து ஜோடிப் புறாக்களாக பிறந்து, வான் வெளியில் ஆனந்தமாய் பறந்து திரிந்தனர். அடுத்த பிறவியில் ஜோடி மான்களாய் பச்சைப் புல்வெளியில் பாடித் திரிந்தனர்.

கடைசியில் ஆணும் பெண்ணுமாய் இந்த பூவுலகில் வந்து பிறந்தனர்.

கதையின் நீதி என்ன?

மனம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்; உடல் அதன் வெளிப்பாடு; அவ்வளவு தான். இரண்டு மனங்கள் இணைந்துவிட்டால் யாராலும், மரணத்தாலும் கூட அவற்றை பிரிக்க முடியாது.

இரண்டு தனிநபர்கள் மனத்தால் இணைந்து இத்தனை துன்பங்களை தாங்கிக் கொள்ளமுடியும் என்றால், ஒரு நிமிடம் யோசியுங்கள் நீங்கள் உங்கள் மனத்தைக் கடவுளிடம் இணைத்து விட்டால் என்னதான் நடக்காது?

இப்படி ஒரு க்ளைமேக்ஸ் உடன் முடிகிறது இந்தக் காதல் கதை!

இந்தக் கதையில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா?

என்ன புரிந்து கொள்ளுகிறீர்களோ, அது உங்கள் பாடு…. நான் எஸ்கேப்!

 

 

published in a2ztamilnadunews.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s