முழங்கால் வலி

முழங்கால் வலி
முழங்கால் வலி  ஒரு உலகளாவிய நோய். எல்லா வயதினரையும்,  ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோய்.

இந்நோய்க்கு காரணங்கள்

 • அலுவலகத்தில் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது;
 • வேலையில் ஏற்படும் மன அழுத்தம்;
 • உடல் பருமன்;
 • போதுமான உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை.

இந்நோய்க்கு  மருந்து என்று சொன்னால் வலி நிவாரணிகளும், வலியினால் உண்டாகும் வீக்கம் குறைய கொடுக்கப்படும் மருந்துகளும் தான். இவைகள் ஆரம்பத்தில் வலி, வீக்கம் குறைய உதவினாலும் நீண்ட காலத் தீர்வு கொடுப்பதில்லை.
இந்த முழங்கால் வலி வராமல் தடுக்கவும், வந்து விட்டால் இது தரும் தாங்க முடியாத வலியிலிருந்தும் காத்துக் கொள்ள முடியாதா? முடங்கின முழங்கால்களை மறுபடி செயல் பட வைக்க முடியாதா? இந்த நோயினால் அவதிப் படும் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி இது. சரியான கேள்வி தான். ஆனால் இந்நோய் வந்தவுடன் பெரும்பாலோர் செய்வது என்ன தெரியுமா?

“முட்டி வலி தாங்க முடியவேயில்லை. மாடிப்படி ஏறுவது இறங்குவது பெரிய பாடாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டு ஒரேயடியாக இவற்றை செய்வதை தவிர்த்துவிடுகிறார்கள். இது மட்டுமல்ல; கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்து கொள்ளுவதையும் விட்டு  விடுகிறார்கள். தங்கள் வீட்டில் இருக்கும் இந்திய பாணி கழிப்பறையை மேற்கத்திய பாணிக்கு மாற்றிவிடுகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் நாம் நம் கைகளையும் கால்களையும், இதர மூட்டுக்களையும் மிக மிக கொஞ்சமே பயன் படுத்துகிறோம். வலி என்று சொல்லி அதையும் தவிர்க்கப் பார்க்கிறோம். இது தவறு அல்லவா? சரி இப்படி செய்வதால் வலி இல்லாத வாழ்வு கிடைக்கிறதா இவர்களுக்கு என்றால், அதுவும் இல்லை. சரி இதற்கு என்ன தீர்வு?

ஒரு விஷயம் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நமக்கு வலி வருவதே நம் உறுப்புகளை நாம் சரிவர பயன் படுத்தாததுதான்.

அதனால் நன்றாக திட்டமிடப்பட்ட உடற்பயிற்சி; அதை விடாமல் செய்யக் கூடிய உறுதியான மனம் இரண்டும் தான் இந்த வலியிலிருந்து விடுதலை கொடுக்கும்.

முதலில் நம் முழங்கால்களின் அமைப்பைப் பார்க்கலாம்: உள் தொடை, முன் தொடை, பின் தொடை வெளித் தொடை என்ற நான்கு தசைகள்; முழங்கால் மூட்டுக்களின் பின் புறமிருந்து ஆரம்பமாகும் ஆடுதசை ஆகிய ஐந்து ‍வகையான பெரிய தசைகளினால் தாங்கப் படும் ஒரு கூட்டமைப்பு தான் நம் முழங்கால்கள்.

இந்த தசைகளின் நெகிழ்வுத் தன்மையையும், செயல் திறனையும் உறுதிப் படுத்தும் வகையில் ஒரு ஒட்டு மொத்த அணுகு முறையுடன் கூடிய பயிற்சிகளை ஒரு நிபுணரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். இதற்கு 4 முக்கியமான பயிற்சிகள் தேவை:

 • Stretching: எனப்படும் நீட்சி பயிற்சிகள்;
 • Flexibility:  பாதிக்கப்பட்ட தசைகளின் நெகிழ்வுத் தன்மையை மறுபடி மீட்டு எடுப்பதற்கான பயிற்சிகள்;
 • Strengthening: இழந்து போன வலுவை மீண்டும் பெற உதவும் பயிற்சிகள்;
 • Functionality: செயல் திறனை மீட்கச் செய்யப்படும் பயிற்சிகள் – வலியினால் நிறுத்தி வைத்திருந்த வேலைகளை நிதானமாக செய்ய ஆரம்பிப்பது தான் இப் பயிற்சி;

முதலில் இந்த தசைகளை நன்றாக நீட்டி (stretching) பழக்க வேண்டும்.  நீங்களாகவே முடிந்த அளவு நீட்டி மடக்கி பழக வேண்டும். நீட்சி பயிற்சியிலேயே நெகிழ்வுத் தன்மையும் வந்து விடும். ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பியபின் உறுதிப் பாட்டுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறிது காலம் ஆனபின் முழங்கால் வலி வருவதற்கு முன் என்னென்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்களோ மெல்ல மெல்ல அவைகளை செய்யத் தொடங்குங்கள்.

நாம் சின்ன வயசில் கற்றுக் கொண்ட நர்சரி பாடல்கள் நமக்கு இன்றைக்கும் மறப்பதில்லை, அல்லவா? அது போலத்தான் நாம் ஏற்கனவே செய்து வந்த வேலைகள்  நம் உடலுக்கும் நினைவிருக்கும். அதனால் தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி வைத்திருந்த வேலைகளை செய்ய ஆரம்பியுங்கள்.

முதலில் 5 நிமிட நடைப் பயிற்சி; பிறகு 10 நிமிடங்கள்; அதே போல ஒரு நாளைக்கு 5 நிமிடம் தரையில் உட்காருங்கள்; டீ.வி. பார்க்கும்போது சாப்பிடும்போது என்று கீழே உட்கார்ந்து பழகுங்கள். நிதானமாக நேரத்தைக் கூட்டுங்கள். தினமும் ஒரு முறை மாடிப் படி ஏறுங்கள். அல்லது இறங்குங்கள். நாட்கள் செல்லச்செல்ல உங்களையும் அறியாமல் பழைய நிலைக்கு வந்து விடுவீர்கள்.

சில சமயங்களில் கீழ் முதுகில் ஏற்படும் விறைப்பு (stiffness) முதலியவற்றாலும் கூட முழங்கால்கள் பாதிக்கக் கூடும். அப்போது கீழ் முதுகு உறுதிப் படத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

மிக முக்கியமான விஷயம்: ஒரு நாள் உடற்பயிற்சி செய்துவிட்டு ஒன்பது நாள் சும்மா இருக்கக் கூடாது. உடற்பயிற்சி என்பதை தினமும் செய்ய வேண்டிய கட்டாய வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும். வலிக்கிறது என்று பயிற்சியை விடாமல் நல்ல பயிற்சியாளரின் வழி காட்டுதலுடன் செய்தால் பழைய நிலைக்கு திரும்பலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வலியுடனேயே பயிற்சி செய்ய வேண்டுமா என்று எண்ணாமல் வலி போகத்தான் இப் பயிற்சிகள் என்று நினைக்க ஆரம்பித்தால் உடலும் ஒத்துழைக்கும்; ஆரோக்கியம் பெருகும். செய்வோமா?

 

 

 

published in arusuvai.com on 21.3.2012

9 thoughts on “முழங்கால் வலி

 1. வலியுடனேயே பயிற்சி செய்ய வேண்டுமா என்று எண்ணாமல் வலி போகத்தான் இப் பயிற்சிகள் என்று நினைக்க ஆரம்பித்தால் உடலும் ஒத்துழைக்கும்; ஆரோக்கியம் பெருகும்.
  பயனுள்ள ஆரோக்கியப் பகிர்வுகள்..

 2. ரொம்ப நல்ல பகிர்வு எல்லொரும் படிக்க வேண்டிய பகிர்வு ஆண் பெண் அனைவரையும் ஆட்டி வைக்கும் வலி இது உடற்பயிற்சி மிக மிக அவசியம்

  1. எல்லாப் பதிவுகளையும் படித்து கருத்து போடுவதற்கு நன்றி விஜயா!

 3. முழங்கால் வலியினால் அசைவின்மை ஏற்படுகின்றதா அல்லது அசைவின்மையால் வலி ஏற்படுகின்றதா என்று பட்டிமன்றமே வைக்கலாம். ஆனாலும் மருத்துவர்கள் நீங்கள் கூறியது போலத்தான் சொல்கிறார்கள். மனதில் உறுதியுடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறியது சரி.

 4. எந்த உடல் பாதிப்பாக இருந்தாலும், நம் மனம் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவே 5௦% நோய் சரியாகி விடும்.
  நம் உடல் உறுப்புக்களைப் பொறுத்தவரை ‘use it or lose it’ என்பதுதான் நிஜம். உடற்பயிற்சி மிக மிக முக்கியம். சாப்பிடுவது, தூங்குவது போல உடற்பயிற்சியும் தினசரி கடமைகளில் ஒன்றாக வேண்டும்.

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி shefath!

 5. முழங்கால் வலி…

  அன்புள்ள அம்மா .,
  தங்களின் முழங்கால் வலி என்ற கட்டுரையை உங்கள் தளத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது… நான் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்… கடந்த ஒரு வருடமாக முடக்கு வாதம் என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறேன்… இந்த நோயால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கும் செல்ல இயலவில்லை.. இந்த நோயை பற்றி சில வரிகள்…

  ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோய்

  இந்தியாவில் சுமார் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு வாத நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

  இந்த மூட்டு வாத நோய் ஆட்டோ இம்யூன் வியாதிகளுள் மிக முக்கிய இடத்தில் இருப்பதற்கு காரணம், இந்த நோய் தரும் வலியும் அதனால் ஏற்படும் இயல்பு வாழ்க்கை முடக்கமும் தான் .

  தாங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது உங்களின் சொந்த கருத்தா? எனென்றால் வலியோடு எப்படி உடற்பயிற்சிகள் செய்வது என்பதுதான்? மேலும் எந்த ஒரு எலும்பு டாக்டரிடம் சென்றாலும் மூட்டு தேய்ந்து விட்டது என்று சொல்கிறார்கள். தேய்மானமான மூட்டுடன் எப்படி 20 வயதில் இளைஞர்கள் போல் நடமாடி திரிவது? உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s