தாஜ் மஹால் – தெரியாத விஷயங்கள்

எல்லோருக்கும் தெரிந்த தாஜ் மஹாலைப் பற்றிப்  புதிதாக என்ன எழுதப் போகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? சிலருக்குத் தெரிந்த, பலருக்குத் தெரியாத அல்லது பலருக்குத் தெரிந்த, சிலருக்குத் தெரியாத விஷயங்களையும், தெரிந்த தாஜ் மஹாலைப் பற்றி தெரியாத விஷயங்களையும், தெரியாத தாஜ் மஹாலைப் பற்றி தெரிந்த விஷயங்களையும்………… என்ன ஒரேயடியாக குழப்புகிறேனா? நிஜம் தான்.

இதுவரை நான் தாஜ் மஹாலைப் பார்த்ததில்லை. (ஐயோ, வாழ்நாளை வீணடித்து விட்டீர்களே!) பலரும் இப்படியே சொல்லி சொல்லிப் படுத்தியதால், இணைய தளம் இந்த உலக அதிசயத்தைப் பற்றி என்ன சொல்லுகிறது பார்ப்போம் என்று கூகுளில் தேடி அலைந்த போது எத்தனை  அதிர்ச்சி, எத்தனை வியப்பு, எத்தனை குழப்பம்! (‘முதல்வன்’ ரகுவரன் போல). சரி ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நல்லெண்ணத்துடன் இதோ எழுத தொடங்கிவிட்டேன்.

முதலில் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்: குர்ரம் என்ற இயற் பெயருடன் பிறந்து பின்னாளில் ஷாஜஹான் என்று பிரபலமான மொகலாய  அரசனால் தன் காதல் மனைவிக்காக (14  வது குழந்தையின் பிரசவத்தில்  அவள் இறந்த போது துக்கம் தாங்க மாட்டாமல்) கட்டப்பட்டது இந்த வெள்ளைக் கல் அற்புதம்.

இப்போது சி.தெ.ப.தெ. அல்லது ப.தெ.சி.தெ. விஷயம்: (கட்டுரையின் 2  ஆம் வாக்கியத்தைப் படிக்கவும். மறுபடி முழுக்க எழுதினால் என்னை அடிக்க வருவீர்கள் அல்லது உங்கள் கணணிக்கு ஆபத்து – அதனால் இந்த சுருக்கம்.)

இந்த வெள்ளைக் கல் அற்புதம்   தேஜேஷ்வர் என்ற சிவன் கோவில்; ஷாஜகானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அடித்து(யாரை?) ச்சொல்லுகிறார் புருஷோத்தம் நாகேஷ் ஓக் (P.N. Oak) என்ற இந்திய எழுத்தாளர். இவர் தன்னுடைய ‘தாஜ் மஹால்: உண்மை கதை’ என்ற புத்தகத்தில் தாஜ் மஹாலைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து இருப்பதைப் படிக்கப் படிக்க அதிர்ச்சி, வியப்பு; எது உண்மை, எது பொய் என்ற குழப்பம். உண்மை என்று நினைப்பது பொய்யாகிவிடுமோ, பொய் என்று நினைப்பது உண்மையாகி விடுமோ என்ற குழப்பம் வேறு!

கிட்டத்தட்ட 108 விதமான விவாதங்களை நம் முன் வைக்கிறார் பி.என். ஓக். சுவாரஸ்யமானவற்றை மட்டும் பார்க்கலாம்.

 1. தேஜோ மஹா ஆலயா என்ற சிவன் கோவிலை அன்றைய ஜெய்பூர் மகாராஜாவிடமிருந்து பறித்து அதனை தாஜ் மஹால் என்று பெயரிட்டுவிட்டார் ஷாஜஹான். இதற்கு ஆதாரமாக ஆக்ராவில் இருக்கும் ஜாட் மக்கள் தேஜா என்று பெயர் வைத்துக்கொள்ளுவதை சுட்டிக் காட்டுகிறார் திரு.ஓக். 12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றான தேஜோ லிங்கம் ஜாட் மக்களின் தெய்வம்.
 2. தாஜ் மஹால் என்ற சொல் மொகலாயர்கள் காலத்திய ஏடுகளிலோ, அரசவைக் குறிப்புக்களிலோ இல்லை.
 3. ஷாஜஹானின் மனைவி பெயர் Mumtaz; கடைசி எழுத்து ‘Z’;  ‘J’ அல்ல. அதனால் ஷாஜஹான் தன் மனைவி நினைவிற்காக கட்டியிருந்தால் அதனை Taz mahal என்று பெயரிட்டிருக்க வேண்டும். தவிர,  உலகிலுள்ள எந்த இஸ்லாமிய  நாடுகளிலும் மஹால் என்ற பெயரில்  ஒரு கட்டிடம் கூடக் கிடையாது.
 4. இறந்தவர்களைப் புதைத்த இடத்திற்கு மஹால் என்று பெயரிடுவார்களா?
 5. தாஜ் மஹாலின் குவிந்த மேல் கூரையின் மீது ஒரு திரிசூலம் காணப்படுகிறது. அதன் நடுத் தண்டு மாவிலைகளும், தேங்காயும் தாங்கிய ஒரு கலசம் போலக்  காட்சி அளிக்கிறது.
 6. மும்தாஜ் இறந்த தேதி சரியாகத் தெரியவில்லை. தன் காதல் மனைவியின் இறந்த தேதியைக் கூட ஒரு அரசன் குறித்து வைக்காமல் இருப்பானா? ஷாஜஹான் மும்தாஜ் காதல் கதை யாரோ இட்டுக்கட்டியது. இந்த காதல் கதைக்கு எந்தவிதமான சரித்திரக் குறிப்புகளோ, புத்தக குறிப்புகளோ இல்லை.
 7. இதைக் கட்ட எத்தனை பணம் செலவிடப்பட்டது, கட்டி முடிக்க எத்தனை நாள் ஆயிற்று, யார் கட்டினார்கள் என்பது எல்லாமே தோராயமாகத்தான் சொல்லப்பட்டு இருக்கிறது.
 8. ஹிந்துக்களின் கோவில் தான் நதிக்கரையில் அமைக்கப்படும். ஹிந்து கோவில்களில் காணப்படும் சதுர்முகி என்ற நான்கு வாயில் அமைப்பே தாஜ் மஹாலிலும் காணப்படுகிறது. நுழைவாயில் தெற்கு நோக்கி இருக்கிறது. இஸ்லாமிய கட்டிடமாக இருந்தால் மேற்கு பக்கத்தில் நுழை வாயில் அமைந்திருக்கும்.
 9. தாஜ் மஹாலைச்சுற்றியுள்ள பல நிலவரைகளின் கதவுகள்   செங்கல், சிமென்ட் ஆகியவற்றால் மூடப் பட்டிருக்கின்றன. அப்படி மூடப்பட்ட ஒரு அறையில் இருந்த சிறிய இடைவெளி மூலம் பார்த்தபோது அங்கு பலவிதமான சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய தூண்கள்  நிறைந்த ஹால் இருப்பதை கண்டதாகச்  சொல்லுகிறார் ஒரு டெல்லி நகர வாசி. இதைத் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் திரு. ஓக்.
 10. மும்தாஜின் சமாதிக்கு கீழே 22 அறைகள் கொண்ட ஒரு ரகசிய தளம் இருப்பதாகவும் அதற்கு போகும் வழியை மூடி இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த தளங்களில் ஹிந்து மத கல்வெட்டுக்கள், மற்றும் சிற்பங்கள்  இருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
 11. ஹிந்துக்களின் கோவில்களைக் கைப்பற்றி அதையெல்லாம் தங்களுடைய சமாதிகளாக மாற்றிக் கொண்ட அரசர்களை பெரிய கட்டிடக் கலை வல்லுனர்களாகச் சித்தரித்து இந்திய சரித்திரத்தை தலை கீழாக மாற்றிவிட்டதாக ஆதங்கப் படுகிறார் திரு. ஓக்.
 12. பொதுவாக புராதனக் கட்டிடங்களின் வயதை அறிய உதவும் ‘கார்பன் டேட்டிங்’ என்ற முறையில் தாஜ் மஹாலின் கற்களை பரிசோதித்தபோது ஷாஜஹானின் காலத்திற்கும் முந்தியவை என்று தெரிய வந்துள்ளது.
 13. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மொகலாயர் காலத்தில் ஹிந்து கோவில்கள் எப்படி சூறையாடப்பட்டன என்பதற்கு தாஜ் மஹால் ஒரு சாட்சி என்கிறார்.
 14. தாஜ் மஹாலைப் பார்க்கச் செல்லும் போது அது ஒரு ஹிந்து கோவில் என்ற எண்ணத்துடன் போனால்தான் அதனுடைய கம்பீரம், விஸ்தீரணம், அழகு இவற்றைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார் திரு. ஓக்.

இன்னும் இதைப்போல பலப் பல ஆதாரங்களை காட்டுகிறார் திரு ஓக். முழு விவரங்கள் விரும்புவோர் திரு.ஓக் அவர்களின் இணைய தளத்திற்கு சென்று படிக்கலாம்.

தாஜ் மஹால் தன்னுள் (மும்தாஜ்ஜைத் தவிர!) எத்தனை ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறதோ? தலையைப் பிய்த்துக் கொண்டு கடவுளே என்று கூப்பிடலாம் என்றால்  அல்லாவா? அரனா? என்ற குழப்பம்!!

 

published in a2ztamilnadunews.com

3 thoughts on “தாஜ் மஹால் – தெரியாத விஷயங்கள்

 1. நல்ல பகிர்வும்மா.. நீங்கள் பகிர்ந்த சில விஷயங்கள் முன்பொருமுறை. மின்னஞ்சல் மூலம் வந்தது. ஆனால் அதில் இந்தப் புத்தகம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இவரது வலைத்தளம் சென்றும் பார்க்கிறேன்….

  திருப்பதி கோவில் கூட முருகன் கோவில் என சில மின்னஞ்சல்கள் வந்தன. முழு விவரம் நினைவில்லை..

  நல்ல பகிர்வுக்கு நன்றிம்மா…

  1. அன்புள்ள வெங்கட்,
   சூப்பர் ஃபாஸ்ட் -ஆக பதிவைப் படித்ததற்கும், கருத்துரைக்கும் நன்றி.
   உங்களைப் பார்த்து இந்த வேகத்தை நான் கற்க வேண்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s