ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சுமார் 1,00,000 பேர் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். உலகில் நடக்கும் தற்கொலைகளில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக நம் நாட்டில் தான் நடக்கிறது. 4 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏன் இப்படி தங்களைத் தாங்களே கொன்று கொள்ளுகிறார்கள்? உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்ன நடந்திருக்கும்? எல்லாத் தற்கொலைக்கும் பொதுவான காரணம் இருக்கமுடியுமா? அப்படி இருந்தால் அது என்னவாக இருக்கும்?தற்கொலை என்பது ஒரு சிக்கலான விஷயம். சமூக, கலாசார குழப்பங்கள், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், தாய் தந்தையரிடையே உண்டாகும் மனத்தாங்கல்கள் என்று பல விஷயங்கள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், மனதில் ஏற்படும் தாங்க முடியாத ஒரு வலியே ஒருவரை இந்த தீவிர முடிவுக்குத் தள்ளுகிறது. வலியைத் தாங்கிக்கொள்ள முடியாத போது, அந்த வலியிலிருந்து மீள, அல்லது தப்பிக்க இறப்பு ஒன்றே வழி என்று இவர்கள் நம்பத் தொடங்குகிறார்கள். இவர்களுக்கு வாழ ஆசைதான்; ஆனால் வாழ்வின் வலிகள் பழக்கமில்லாமல் போவதால் தற்கொலையை நாடுகிறார்கள்.ஒருவர் தற்கொலைக்குத் தயாராகிறார் என்று எப்படி அறிந்து கொள்ளுவது?
பல்வேறு காரணங்களும், பலவிதமான சூழ்நிலைகளும் ஒருவரை தற்கொலைக்குத் தள்ளுகின்றன.
துக்கமான சூழ்நிலை
- அன்பிற்குரியவரின் இறப்பு, மணமுறிவு, முற்றிய சண்டை, கணவனிடமிருந்தோ, மனைவியிடமிருந்தோ பிரிந்திருப்பது.
- பணப் பிரச்சினை, திடீரென நோய் வாய்ப்படுவது, வேலை இழப்பு, கடன் தொல்லை.
- தன் மேல் வழக்கு விவகாரம் எதாவது வந்துவிடுமோ என்ற பயம்; தன்னை யாராவது அடித்து விடுவார்களோ என்ற பயம்.
- போதை மருந்துக்கு அல்லது குடிக்கு அடிமை ஆதல்.
- ஏற்கனவே தற்கொலை முயற்சியில் தோல்வி;
- குடும்பத்தில் வேறு யாராவது தற்கொலை செய்துகொண்டிருப்பது.
நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள்:
- துக்கத்தில் ஆழ்ந்து இருப்பது, எதிலும் பற்றில்லாமல் போவது, எரிச்சல், பரபரப்பு, முடிவு எடுக்க முடியாமல் குழப்பம்;
- தூக்கமின்மை, அதீத சோர்வு, கவனமின்மை;
- அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவது, அல்லது பசியின்மை;
- பணக்கவலை, தன்னை நம்பியிருப்பவர்களைப் பற்றிய கவலை;
- திடீரென்று அழுவது, அல்லது மிதமிஞ்சிய சந்தோஷத்தை காட்டுவது
பேச்சில் மாற்றம்:
- தான் தனிமையை விரும்புவதாக அடிக்கடி கூறுவது; அல்லது தான் தனி, தனக்கு யாருமில்லை என்று சொல்லுவது;
- தான் எதற்கும் லாயக்கில்லை; தன் வாழ்வு வீண் என்பது;
- சுய மரியாதையை இழந்துவிட்டதாக நினைப்பது;
- குற்ற உணர்ச்சி; அவமான உணர்ச்சி;
- வாழ்வதினால் என்ன பயன் என்பது; இறப்பைப் பற்றியும் தற்கொலையைப் பற்றியும் அடிக்கடி பேசுவது;
தற்கொலையைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
- தற்கொலையை பற்றிப் பேசுகிறவர்கள் தற்கொலை பண்ணிக் கொள்ளுவதில்லை:
மிகத்தவறான கருத்து. தற்கொலைக்கு முயல்பவர்கள் கட்டாயமாக அது பற்றி தன் நெருங்கிய தோழர்களிடம் கோடி காட்டுகிறார்கள் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். “நான் இறந்திருக்கலாம்” என்றோ “நான் போன பிறகுதான் என் அருமை புரியும்” என்பது போலவோ இவர்கள் பேசத் துவங்குகிறார்கள்.
- தற்கொலை என்பது திடீரென்று நடக்கிறது. முன்னறிவிப்போ, முன் எச்சரிக்கையோ இருப்பது இல்லை:
இதுவும் தவறான கருத்தே. அவர்களது பேச்சில் தற்கொலையைப் பற்றி பேசுகிறார்கள். தங்களுக்கு யாராவது உதவ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் அவ்வப்போது அவர்களது பேச்சில் வெளிப்படும். நடவடிக்கை களிலும் மேற்சொன்ன மாறுதல்கள் தென்படும்.
- இறந்து போவது ஒன்றே அவர்களது குறியாக இருக்கும்.
எந்த வயசுக் காரர்களாக இருந்தாலும், எந்த விதமான பிரச்சினை இருந்தாலும் வாழ்வதில் அவர்களுக்கு ஆசை இருக்கும். அவர்களது மன வலியிலிருந்து மீள வேறு வழி இருப்பது தெரிந்தால் தற்கொலை முயற்சி செய்யும் ஒவ்வொருவரும் வாழவே விரும்புகிறார்கள் என்பதே உண்மை.
- தற்கொலை முயற்சி செய்பவர்கள் எல்லோரும் மன வளர்ச்சி குறைந்தவர்கள்
நல்ல மன நலம் உள்ளவர்களும் கூட, தாங்கள் அனுபவித்து வரும் துக்கத்திலிருந்து, அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற தற்கொலையை எளிமையான வழி என்று நினைக்கிறார்கள்.
- தற்கொலையை பற்றி வெளிப்படையாகப் பேசுவது தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்
தற்கொலையைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, அதற்கு தீர்வும் இருக்கிறது என்று சொல்லுவது ஒருவரின் தற்கொலை முயற்சியைத் தடுக்கும். அவர்களுக்கு வாழ்வின் மேல் இருக்கும் நம்பிக்கையை வலுப் பெறச்செய்யும்.
தற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு வெளியில் இருப்பவர்கள் எப்படி உதவலாம்?
காது கொடுங்கள்:
அவர்கள் பேசும் போது, அதாவது தங்கள் துக்கத்தையோ, ஏமாற்றத்தையோ வெளியிடும் போது காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளை மதியுங்கள். விமரிசனம் செய்யாமல் முழுக் கவனத்துடன் கேளுங்கள்.
தனெக்கென ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தற்கொலை முயற்சியில் இருந்து ஒருவரை மீட்கும்.
நம்பிக்கை கொடுங்கள்:
அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை காப்பாற்றுங்கள். வேறு நண்பர்களிடமோ, உறவினரிடமோ அவரது ரகசியம் உங்கள் மூலம் வெளிப் படாமல் இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்களது நட்பு மாறாது, அவரை விட்டுக் கொடுத்து பேச மாட்டீர்கள் என்ற உத்திரவாதம் கொடுங்கள்.
அக்கறையை காட்டுங்கள்:
அவரிடம் நீங்கள் எத்தனை அன்பும் அக்கறையும் உடையவர் என்பதை உங்கள் பேச்சில் வெளிப் படுத்துங்கள். கனிவும் கருணையும் நிறைந்த சொற்களால் அவரது மனப் புண்ணுக்கு ஆறுதல் களிம்பு பூசுங்கள்.
பழையதைக் கிளறாதீர்கள்:
முடிந்து போனவற்றைக் கிளறாதீர்கள். முடிந்தவை முடிந்தவைகளாகவே மடிந்து போகட்டும். அதிகமாக அறிவுரை கூறாதீர்கள்.
புதிய பாதையைக் காட்டுங்கள்:
புதிய கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு உதவுங்கள். இததனைதான் வாழ்க்கை என்றில்லை; இன்னும் எத்தனையோ இருக்கிறது என்று புதிய பாதையைக் காட்டுங்கள்.
மேற்சொன்ன அனைத்து முயற்சிகளையும் செய்தும் பலனில்லை என்றால், பல தனியார் அமைப்புகள் தற்கொலை முயற்சியைத் தடுக்க என்று கவுன்சிலிங் செய்கிறார்கள். அங்கு அழைத்துச் செல்லுங்கள்.
“அரிது அரிது மானிடரைப் பிறத்தல் அரிது”
ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மனித நேயம் வேறு ஏதாவது உண்டா?
ஒவ்வொன்றை பற்றியும் விரிவான விளக்கம் அம்மா…
தற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு வெளியில் இருப்பவர்கள் எப்படி உதவலாம்..? – அருமை…
வாருங்கள் தனபாலன்,
படித்து ரசித்தற்கு நன்றி!
நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கிறது.
மிக அழகாக சொல்லி விட்டீர்கள் . தற்கொலை செய்பவர்கள் எல்லோரும் கோழைகளே!
நம் சமுதாயம் இப்பொழுது மாறி விட்டது எனலாம். பொருளாதாரம் என்னவோ உயர்ந்திருக்கிறது. ஆனால் மன அழுத்தம்,………. அந்த பிரச்சினையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
அதை எப்படி தவிர்க்கலாம் என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் அருமை.
நன்றி பகிர்விற்கு,
ராஜி
வாருங்கள் ராஜி! கோழைகள் என்று சொன்னாலும் தாங்களாகவே தன உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்க தைரியம் வேண்டும் இல்லையா?
ஒரு சின்னத் தோல்வியை கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் எப்படி? வருத்தமான உண்மைகள்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Reblogged this on இரண்டாவது எண்ணம்!.
மிக அருமையான ஒரு விளக்க கட்டுரை அம்மா!!
கண்டிப்பாக இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்! சமீபத்தில் என் தோழி ஒருத்தி தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றபட்டாள்.. (காரணம் அவளின் திருமண தேதிக்கு சிலநாட்களுக்கு முன் மணமகன் ஒரு விபத்தில் இறந்ததுவிட்டார்)… ஒரு வேலை அவளை தனிமைபடுத்தாமல் மற்றவர்கள் உடனிருந்து காத்து இருக்கலாம்!!
ஒரு நிமிட முட்டாள் தனம்… வாழ்க்கை எனும் அறிய வாயிபினை தவற விட செய்கிறது!!
வா சமீரா!, நீ சொல்லுவது ரொம்பவும் நிஜம்.
மனது வருத்தத்தில் இருப்பவர்களைத் தனியே விடவே கூடாது. துக்கத்தில் மூழ்கியிருப்பவர்களை தூக்கி நிறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
உன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சமீரா!
ஆவேசத்தில் முட்டாள்த்தனமான முடிவுகளுக்குப் போக யோசிப்பவர்களுக்கு இதமான வார்த்தைகள். வாழ்க்கை புரிந்து கொள்வதற்கே அவகாசம் தேவை. நன்றாகப் புரியும்படி இருக்கிரது கட்டுரை.
வாருங்கள் காமாட்சி அம்மா!
எப்படியாவது இந்த முயற்சிகள் நிற்காதா என்ற ஆதங்கத்தில் எழுதியது.
நன்றி உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்கு!
uruppadiyaana pathivu. Hats off u madam.
வாருங்கள் ராஜு! நன்றி வாழ்த்துகளுக்கு!
மற்ற பதிவெல்லாம் உருப்படி இல்லை என்கிறீர்களா? (சும்மா வேடிக்கைக்கு!)
முட்டாள்தனமான முடிவு எடுப்பவர்களுக்காக வருத்தப்பட மட்டுமே செய்வதை விட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய இந்த சமுதாயம் முன் வர வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் நமக்குள் இருக்கும் மன தைரியத்தை தட்டி எழுப்ப முழு முயற்சியும் நாம் செய்ய வேண்டும் நல்ல பகிர்வு தரமான கருத்துக்கள் ரஞ்சனி
உறவுகளிலும் நட்பு வட்டத்திலும் கருத்து பரிமாற்றகள் குறைவதே இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருக்கிறது.. இயந்திர கதியான வாழ்வில் எதோ ஒன்றை நோக்கிய அனைவரின் பயணமும் ஒருவரை மற்றவரிடமிருந்து தனிமை படுத்திக் கொண்டே இருக்கின்றன… வெளிபடுத்த முடியாத சோகமும் தீர்க்க முடியாத தனிமையும் இறுதியில் இந்த எண்ணத்தில் கொண்டு சேர்கின்றன… ஒவ்வொருவரும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களையும் சமூகத்தையும் அறிய முற்படுதலே இதற்கான தீர்வாக அமையும் என்பது என் கருத்து.. அன்பு என்ற பயிரை நீரூற்றி முடிந்த வரை நன்றாக வளர்ப்போம் சக உயிர்களை காக்க…
வாருங்கள் பிரியா!
சக உயிர்களைக் காக்க அன்பு ஒன்றே வழி என்ற உங்கள் கருத்தை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்.
வருகைக்கும், கருத்துப் பரிமாறுதலுக்கும் நன்றி!
அருமையான பகிர்வுங்க… நான் வலைப்பக்கத்திலிருந்துதான் என் பகிர்வுக்கான விவரங்களை எடுத்தேன்..உங்களின் இந்தப் பதிவு இன்னமும் விளக்கமாக உள்ளது…