உப்பில்லாத பண்டம் குப்பையிலே

உப்பில்லாத பண்டம் குப்பையிலே

சிறு வயதில் படித்த பழமொழி. தற்சமயம் எல்லோருடைய வீட்டிலும் அதிக இரத்த அழுத்தம் நோய்  யாரேனும் ஒருவருக்காவது இருக்கிறது. அதனால் உப்பைக் குறைத்துகொள்ளும்படி மருத்துவர் கூறுகிறார். அதிக இரத்த அழுத்தத்தால் ஒருவர் படும் அவதி, அந்த வீட்டில் இருக்கும் எல்லோரையுமே பாதி உப்பு சாப்பிடும்படி செய்துவிடுகிறது. யாருக்கு என்ன ஆனாலும் சரி “என்னால் உப்பைக் குறைக்க முடியாதப்பா” என்று சொல்லுபவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைக்கவேண்டும் என்றால், சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை உப்பு தேவை?
உப்பில் அதிகப்படி இருப்பது சோடியம் குளோரைடு. உணவிற்கு ருசி கூட்டுவதுடன் நம் உடலுக்குத் தேவையான சோடியத்தையும் கொடுக்கிறது. உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளுவதால் அதிக இரத்த அழுத்தம், பக்க வாதம், உடம்பில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், சுண்ணாம்பு சத்துக் குறைவு முதலிய உபத்திரவங்கள் உண்டாகும்.

பல சமயம் உப்பு மற்றும் சோடியம் இரண்டும் மாறி மாறி ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. இது தவறு. உப்பு என்பது வேறு; சோடியம் என்பது வேறு.  உப்பில் 40% சோடியம் 60% குளோரைடும் இருக்கிறது. உடம்பில் உள்ள நீரின் அளவு சமமாக இருக்கவும், தசைகள் சுருங்கி விரியவும் சோடியம் தேவை.

நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஆறு கிராம் உப்பு போதுமானது. அதாவது ஒரு டீஸ்பூன். இதற்கு குறைவாக உபயோகித்தாலும் நல்லதுதான். இதற்கு அதிகமான உப்பு எடுத்துக் கொள்ளுவது நாட்பட்ட நோய்களை உண்டாக்கும்.

நம்மூரில் சராசரியாக ஒருவர் 10 முதல் 12 கிராம் உப்பு ஒரு நாளைக்கு பயன்படுத்துகிறார். இது மிக மிக அதிகம் ஆகும். மெது மெதுவே உப்பைக் குறைப்பது நல்லது. ரொம்பக் கொஞ்சமாக உப்பு சாப்பிடுவதும் தவறு. உப்பு குறைந்தால் தசைப் பிடிப்பு ஏற்படும். மற்றும் electrolytes எனப்படும் மின் அயனிகளின் ஏற்றத் தாழ்வுக்கும் குறைவான உப்பு காரணமாகும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது மிகுந்த கவனம் தேவை. இவற்றில் பொட்டாஷியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் இருக்கும். இதனால் இந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டால் அதிக இரத்த அழுத்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது. ஊறுகாய், உப்பு பிஸ்கட், வறுத்த உப்பு சேர்த்த முந்திரி, வெண்ணை, சீஸ், சாஸ், உருளைக் கிழங்கு சிப்ஸ் முதலியவற்றை மிதமாக உண்ணுங்கள். முடிந்தால் அறவே தவிர்த்து விடுவது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மேல் உள்ள அட்டவணையில், எந்த அளவு உப்பு இருக்கிறது என்று பார்த்து பிறகு இவைகளை வாங்குங்கள்.  உணவிற்கு ருசி கூட்ட வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை அதிகம் பயன்படுத்தி உப்பைக் குறைக்க முயற்சிக்கலாம். திடீரென்று உப்பைக் குறைப்பது கடினம்தான். ஆனால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வரும்போது, முயற்சி செய்வதில் தவறில்லையே?

உப்பு எப்படி நம் எடையை பாதிக்கிறது என்று பார்க்கலாமா?

உப்பு ஒரு கலோரி இல்லாத ஒரு பண்டம். “நாங்கள் சொல்லும் உணவை சாப்பிட்டால் ஒரே மாதத்தில் கொடி இடையைப் பெறலாம்” என்று விளம்பரம் செய்கிறார்களே, இவர்கள் உப்பு குறைவான அல்லாத உப்பே இல்லாத உணவையே சாப்பிடச்சொல்லுகிறார்கள். உப்பு குறைத்துச் சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் நீர் குறைகிறது எடையும் குறைகிறது. மறுபடியும் நீங்கள் உப்பு சேர்த்த உணவை சாப்பிடும்போது எடையும் கூடுகிறது. இது போன்ற ‘diet’ வேண்டவே வேண்டாம்.


நாமே தினசரி உப்பைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்:

  • ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவில் அதிகப்படி உப்பு சேர்க்க வேண்டாம்.
  • சிலர் தயிர் சாதத்திற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுவார்கள். சில வீடுகளில் சாதம் சமைக்கும்போது அதில் உப்பு சேர்க்கும் பழக்கம் இருக்கிறது. இவற்றைத்  தவிர்க்கலாம்.
  • தினமும் சப்பாத்தி சாப்பிடுபவரா நீங்கள்? சப்பாத்தி மாவில் உப்பு சேர்க்க வேண்டாம். அதற்கு தொட்டுக் கொள்ள செய்யப்படும் பொரியல், கூட்டு இவற்றில் இருக்கும் உப்பு போதுமானது.
  • உப்பை குறைக்க மருத்துவர்கள் சொல்லும் வழி: சமைக்கும்போது சாம்பார், பொரியல் இவற்றில் உப்பு சேர்க்க வேண்டாம். ஒரு டீஸ்பூன் தலை தட்டி உப்பு எடுத்து வைத்துக் கொண்டு நீங்களாகவே சாம்பார், பொரியல் இவற்றை உங்கள் தட்டில் போட்டுக் கொண்டு அவற்றிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த அளவு உப்புதான் ஒரு நாள் முழுவதற்கும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளவும்!

கடைசியாக ஒன்று:

மாதத்திற்கு ஒரு நாள் உப்பில்லாமல் சாப்பிடலாம். கும்பகோணம் அருகில் ஒப்பிலியப்பன் என்கிற பெருமாள் கோவில் இருக்கிறது. அந்த சந்நிதியில் பெருமாளுக்கு தினமுமே உப்பு இல்லாமல் தான் தளிகை செய்கிறார்கள். பிரசாதம் எதிலும் உப்பு கிடையாது. நாச்சியாரை பெருமாள் திருக்கல்யாணம் செய்துகொண்ட போது நாச்சியார் மிகச் சிறிய வயதுடைய பெண்ணாக இருந்ததால் அவளது தந்தையார் “என் பெண்ணுக்கு உப்புப் போட்டு தளிகை செய்யத்தெரியாது” என்று பெருமாளிடம் சொல்ல, நாச்சியாருக்காக பெருமாள் “உப்பில்லாமல் சாப்பிடுகிறேன்” என்று சொன்னதாக வேடிக்கையாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. அதனால் பெருமாளுக்கு “உப்பிலியப்பன்” என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது. பெருமாளே தினமும் உப்பு இல்லாமல் சாப்பிடும் போது நாம் அவரை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று உப்பில்லாமல் சாப்பிடலாம்.

 

 

published in a2ztamilnadunews.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s