நானும் என் ஸ்நுஷாவும்!


“கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே…..” பாடிக் கொண்டே தோசை வார்த்துக் கொண்டிருந்தேன். மாட்டுப் பெண் உள்ளே நுழையவும் பாட்டைச் சட்டென்று நிறுத்தினேன். என் மகனுக்குத் திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தது.
என்னைச் சற்று அதிசயமாகப் பார்த்தவளைக் கேட்டேன்: “என்ன, நானும் பாடுவேன் என்று நினைக்கவில்லையா?” என்று. ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். எங்கள் வீட்டில் எல்லோருமே எந்த பாட்டாக இருந்தாலும் நன்றாக இருந்தால் கேட்போம். அவ்வப்போது பாடவும் பாடுவோம். அன்றைய ‘சொப்பன வாழ்வில் இருந்து இன்றைய ‘கொலைவெறி’ வரை எங்கள் வீட்டில் ரசிகர்கள் உண்டு.

 

“நான் ஏன் தெரியுமா இவ்வளவு நாள் பாடவில்லை? ஏற்கனவே மாதவன்(என் பிள்ளை) பாடிக் கொண்டே இருக்கிறான். அவன் பாடவில்லையானால் அவனது ம்யுசிக் சிஸ்டம் பாடிக் கொண்டிருக்கும். இந்த அழகில் நான் வேறு பாடினால்…….? ‘நீங்கள் பாடினால் ஒகே. உங்கள் அம்மாவும் பாடி படுத்தறாளே அப்பிடின்னு நீ  திருவல்லிக்கேணி (அவளது பிறந்தகம்) க்கே திரும்பிப் போய்விட்டால் என்ன பண்றது? அதனால் தான்….” நான் சொல்லி முடித்தவுடன் என் மாட்டுப் பெண்ணுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

என் மகனுக்கு 2011 வது வருடம் ஜனவரி மாதம் திருமணம் ஆயிற்று. மகனுக்குத் திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றவுடன் ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
” சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதேங்கோ மன்னி, இந்தக் காலத்துப் பொண்கள் நம்மள மாதிரி இல்லை. என்னோட மன்னியோட ஒண்ணு விட்ட சித்தியோட பொண்ணு ……”

“ஜாக்கிரதைடி! என் பிள்ளைக்கு வந்த பொண்ணு ஜாதகத்துல……”
“நிறைய படிச்சுடறாளா? தலை கால் புரியாம ஆடறதுகள்….”
என்று உற்றார் உறவினர், தெரிந்தவர் தெரியாதவர் என்று என் வயிற்றில் புளி, உப்பு என்று எதெதையோ கரைத்தனர்.
நல்ல காலம், பெரியவர்கள் புண்ணியத்தில் வெகு விரைவில் கிடைத்துவிட்டாள் மாட்டுப் பெண்.
திருமணம் நிச்சயம் ஆனவுடன் மேற் சொன்ன உற்றார் உறவினர்கள் வேறு விதமாகப் பேச ஆரம்பித்துவிட்டனர்.
“வேலைக்குப் போற மாட்டுப் பெண்ணா? நீ இனிமேல் அக்கடான்னு உட்கார முடியாது….”
“கை நிறைய சம்பாதிக்கிறா….. உஷார்….!”
எனக்கு ‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்’ என்கிற பாட்டுத்தான் நினைவுக்கு வந்தது.

 

“நீ சுறு சுறுன்னு இருந்தால் தான் மாட்டுப் பெண்ணும் சுறு சுறுன்னு இருப்பாள்….. நீ சோம்பி உட்கார்ந்தே அவ்வளவுதான். அவளும் உன் பக்கத்தில் வந்து உட்கார்ந் விடுவாள்..!!” இது என்ன அறிவுரையா அல்லது பயமுறுத்தலா?
மாட்டுப் பெண்ணிடம் எப்படி நல்ல பேர் வாங்குவது? மருமகள் மெச்சிய மாமியாராக எப்படி இருப்பது? என்று யாராவது வகுப்பு எடுத்தால் தேவலை என்று தோன்றியது. தொலைகாட்சி நெடு………………………ம் தொடர்களைப் பார்த்துப் பார்த்து மாமியார் மருமகள் உறவு என்பதே எனக்கு குலை நடுக்கத்தைக் கொடுத்தது.

 

சரி அதை விடுங்கள் . என் கதைக்கு வரலாம்.

 

நானாகவே சில முடிவுகள் எடுத்தேன்; ‘பாவம் சின்னப் பெண்; வேறு வீட்டில் பிறந்து நம்மாத்திற்கு வருகிறாள்; நாம் தான் அவளுக்கு எல்லாம் சொல்லித் தரணும்’ என்று.

 

கல்யாணம் நல்லபடியாக நடந்தது. மாட்டுப் பெண் பெங்களூருக்கு வந்து விட்டாள். ஆரம்பத்தில் சின்ன சின்ன உதவிகள் செய்து கொடுத்தாள். நான் தளிகை பண்ணும் போது கூடவே நின்று பார்த்துக் கொண்டாள். சகஜமாகப் பேசினாள். அப்பாடி நான் பயந்தபடி இல்லை என்று எனக்குள் ஆசுவாசம்.

 

அவளுடைய பிளஸ் பாயின்ட் என்னவென்றால் ‘பளிச்’ என்ற சிரிப்பு. எங்கள் எல்லோருக்குமே பிடித்திருந்தது அவளது ‘பளிச்’ சிரிப்பு. என் மாட்டுப் பெண்ணிற்கு நல்ல பெரிய கண்கள்.உள்ளத்தில் நினைப்பதை அப்படியே கொட்டிவிடும் கண்கள். “சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள்… என்று பாடலாம்டா நீ” என்றேன் மகனிடம். மாட்டுப் பெண் ‘பளிச்’.

 

தினமும் என்னைக் கேட்டுக் கொண்டுதான் அன்றைய சமையலுக்கு வேண்டிய காய்களைத் திருத்தித் தருவாள். ஒருநாள் அவளிடம் “இனிமேல் நீயே தீர்மானம் செய்து திருத்தி வைத்து விடு” என்றேன். அன்றிலிருந்து ‘அம்மா, குழம்பிற்கு இந்தக் காய், கரியமுதிற்கு இந்தக் காய் திருத்தியிருக்கிறேன்’ என்று சொல்லிவிடுவாள்.

 

சமைக்கும்போது சின்னச் சின்ன டிப்ஸ் கொடுத்தேன். அவள் செய்யும் எல்லா வேலைக்கும் டிப்ஸ் கொடுத்தேன்; எப்படி செய்வது என்று வகுப்பே (!) நடத்தினேன். மொத்தத்தில் என் தலையில் நானே அக்ஷதை போட்டுக் கொண்டு அவளை படுத்திக் கொண்டிருந்தேன். இது எனக்குப் புரிந்ததே ஒரு வேடிக்கைதான்.
ஒரு நாள் என் மாட்டுப் பெண் சாத்துக்குடி உரிக்க ஆரம்பித்தாள்; உடனே நான் சாத்துக்குடி எப்படி உரிக்கணும் தெரியுமா? என்று அவள் கையில் இருந்ததை வாங்கிக்கொண்டேன். அப்போது அவள் என்னை ஒரு பார்வை பார்த்தாள். சட்டென்று என் மூளையில் ஒரு மின்னல்! அவள் நினைப்பது புரிந்துவிட்டது.’சாத்துக்குடி உரிக்கக் கூட டுடோரியல் எடுப்பீர்களா?’ என்று அவள் கேட்கவில்லை; நான் கேட்டேன்: ‘என்ன சாத்துக்குடி உரிக்கக் கூட டிப்ஸ் கொடுப்பீர்களா என்று தானே நினைக்கிறாய்?” இரண்டு பேருமே சிரித்துவிட்டோம்.

 

அவளது இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட்: மிக நன்றாக வரைவாள். கோலம் நன்றாகப் போடுவாள். க்ரியேடிவிடி அதிகம். தினமும் நான் என் நடைப் பயிற்சிக்கு போகும் முன் வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து விடுவேன். அவள் எழுந்து வந்து கோலம் போடுவாள்.

 

என் மாட்டுப் பெண்ணிற்கு சில சமயங்களில் காலை வெகு சீக்கிரமே அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டியிருக்கும். கார்ன் பிளேக்ஸ், அல்லது பிரெட் எடுத்துக் கொண்டு போவாள். ஒரு நாள் இரவு என் மாட்டுப் பெண் என்னிடம் “நாளைக்கு என்ன எடுத்துக் கொண்டு போவது என்றே தெரியவில்லை. பிரெட், கார்ன் பிளேக்ஸ் இரண்டுமே போரடித்து விட்டது.” என்றாள். உடனே நான், “நீ கவலைப் படாதே. நான் சீக்கிரம் எழுந்து சாதம் பண்ணி புளியோதரை கலந்து கொடுக்கிறேன்” என்று பிரமாதமாகச் சொல்லிவிட்டேன்.

 

அடுத்தநாள் நாலரை மணிக்கு அலாரம் அடித்தது. இன்னும் ஒரு பத்து நிமிடம் கழித்து எழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு அலாரத்தை அணைத்தவள் நன்றாகத் தூங்கிவிட்டேன். திடீரென்று விழிப்பு வந்து மணியைப் பார்த்தாள் மணி ஆறு. ச்சே! என்ன இப்படிச் செய்துவிட்டோம் சரி அவளிடம் ‘சாரி’ சொல்லிவிட வேண்டியதுதான் என்று முதலில் நினைத்தவள், உடனே மனதை மாற்றிக் கொண்டேன்: சட்டென்று சப்பாத்தி மாவு கலந்தேன். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி நறுக்கி சிறிது வதக்கி விட்டு சிறிதளவு பயத்தம் பருப்பைப் போட்டு தால் பண்ணி சப்பாத்தி பண்ணிக் கொடுத்தேன். “நீங்க ஏன்மா இவ்வளவு கஷ்ட படணும்? ஆபீஸ் காண்டீனில் ஏதாவது வாங்கிப்பேனே” என்றாள். நான் “ஒண்ணும் கஷ்டமே படலம்மா. என் பெண்ணாக இருந்தால் பண்ண மாட்டேனா? நீதான் இப்போ என்னோட பெண். டோன்ட் பீல் கில்டி” என்றேன்.

 

அன்றிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையே இருந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத திரை விலகினாபோல ஒரு உணர்வு. இனிமேல் எங்களுக்கிடையே பரஸ்பரப் புரிதல் இருக்கும். இந்தப் புரிதலால் பயன் யாருக்குத் தெரியுமோ? நிச்சயம் என் பிள்ளைக்குத்தான். அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையே மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டிய தேவை இல்லையே!

 

பி.கு: அது சரி, கட்டுரையின் தலைப்பில் ‘ஸ்நுஷா’ என்று எதோ எழுதியிருக்கீங்களே, அது யார் என்கிறீர்களா? சம்ஸ்கிருதத்தில் ஸ்நுஷா என்றால் மாட்டுப் பெண்!

 

 

 

 

20 thoughts on “நானும் என் ஸ்நுஷாவும்!

  1. Dear Ranjani, I read this article and enjoyed it once again. Nice to know your subtle efforts to bring
    harmony in the household. Will be useful for all mothers in law.

    1. நன்றி விஜயா! எல்லோருமே உங்களைப்போல நினைத்தால், நம் தொல்லைக்காட்சி சீரியல்களுக்கு கதையே அகப்படாது.

  2. அன்றிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையே இருந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத திரை விலகினாபோல ஒரு உணர்வு. இனிமேல் எங்களுக்கிடையே பரஸ்பரப் புரிதல் இருக்கும்.

    சீரிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  3. ம்ம்ம்ம்ம் ரசித்தேன் மாமியாராக இல்லாமல் தாயாக இருந்து மாட்டுப்பெண்ணிலிருந்து ஸ்நூஷாவில் இருந்து தன் மகளாக ஏற்றுக்கொண்டு தோழியாக அரவணைத்து மிக இயல்பாக இருவரும் இணைந்தது படிக்கவே அத்தனை சந்தோஷமாக இருந்ததும்மா…

    அசத்தலாக ஆரம்பித்து ரொம்ப இயல்பு நடையாய் எழுதி இருகீங்கம்மா…

    மாமியாரும் மருமகளும் வீட்டில் ஒற்றுமையாக இருக்க அநேக டிப்ஸ் கொடுத்திருக்கீங்கம்மா.. இதுவே பயனுள்ளவை படிக்கும் எல்லாருக்கும்…

    இதனால் வீடு அமைதியாக இருக்கும். கோகுலம் போல சந்தோஷம் நிறைந்திருக்கும்…. முக்கியமா ஸ்ட்ரெஸ் இல்லாம இருப்பார் உங்க பிள்ளை…

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பது எத்தனை நிதர்சனம் பாருங்க.

    அழகா பளிச்சுனு சிரித்து பெரிய கண்களால் உங்கள் மனதிலும் நிலைத்து நிற்கும் உங்க மகளான மருமகளுக்கு என் அன்பு வாழ்த்துகள்மா…

    உங்களுக்கும் என் அன்புவாழ்த்துகள் அம்மா..

  4. அன்பின் ரஞ்ஜனி – அருமை அருமை – மாமியாரும் ( சம்ஸ்கிருதத்தில் என்ன ? ) ஸ்நுஷாவும் சூப்பர் காம்பினேஷன் . மாதவனுக்குப் பிரச்னை இல்ல – வாழ்க வளமுடன் – நல்வாழ்த்துகள் ரஞ்ஜனி – நட்புடன் சீனா

    1. ஷ்வஷ்ரூ (shvashroo) என்றால் மாமியார்.

      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா!
      மிகவும் தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டும்.

  5. // “ஒண்ணும் கஷ்டமே படலம்மா. என் பெண்ணாக இருந்தால் பண்ண மாட்டேனா? நீதான் இப்போ என்னோட பெண். டோன்ட் பீல் கில்டி” என்றேன்.//

    மாமியார் …, தங்கமான மாமியார்…. கொடுத்துவைத்த ஸ்நுஷா. வாழ்த்துகள் இருவருக்கும்.

    அன்புள்ள கோபு.

  6. சூப்பர் ஜோடி,நல்ல மாமியார் நல்ல மருமகள்.”மாற்றுப்பெண்” என்னும் வார்த்தை தான் மாட்டுப்பெண் என்று மருவி வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்,ஒவ்வொரு மாமியாரும் தன் மறுமகளை “மறு மகளாக” நடத்தினால் மாமியார் மருமகள் சண்டை இருக்காது. மாமியர் மறுமகள் சைக்கலாஜி பற்றி “மிட்டாய் வீடு என்கிற பத்து நிமிட குறும்படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி.
    குறும்பட முகவரி:http://www.youtube.com/watch?v=WIBmUHXxx3g

    1. வருகைக்கு நன்றி விஜயன்.
      குறும்படத்தை பார்த்து விடுகிறேன்.

      இன்று உங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறேன். பார்க்கவில்லையா?

  7. எல்லோரும் இப்படி புரிந்து பழகினால் உலகமே பூங்காவாகிவிடும் நன்றி பாராட்டும் கூட தோழி

  8. நானாகவே சில முடிவுகள் எடுத்தேன்; ‘பாவம் சின்னப் பெண்; வேறு வீட்டில் பிறந்து நம்மாத்திற்கு வருகிறாள்; நாம் தான் அவளுக்கு எல்லாம் சொல்லித் தரணும்’ என்று.

    அதே, அதே! சரியான முடிவு. நாமும் மூஞ்சியைத் தூக்கி வைச்சுக் கொண்டு இருந்தால் அவளுக்கும் என்னதான் செய்ய முடியும்! வேறு வீட்டில் இருந்து வந்த பெண்ணுக்கு இங்கே எல்லாம் புரிய மனம் ஒருமைப்பட கொஞ்ச நாளாகும் என்பதை நாமும் புரிஞ்சுக்கணும். நாம் மருமகளா வந்தப்போ இப்படித் தானே கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாப்போல் இருந்தது. அதே தானே அவளுக்கும். நல்ல பதிவு. இன்று தான் படிச்சேன்.

    1. வாருங்கள் கீதா!
      இதிலும் நமக்குள் எத்தனை ஒற்றுமை பாருங்கள்!
      வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

Leave a comment