மறக்கமுடியாத மாணவர்கள்!

 

interviewமறக்க முடியாத மாணவர்கள் என்றால் நிறைய பேர்கள் நினைவிற்கு வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மாதிரி. வயது வித்தியாசம் வேறு; சிலர் மிகவும் சீரியஸ் ஆக கற்றுக்கொள்ள வருவார்கள். சிலர் ‘டேக் இட் ஈசி’ பாலிசியுடன் வருவார்கள். வகுப்பறையை கலகலவென்று ஆக்குபவர்கள்; தங்களது கஷ்டங்களைச் சொல்லி எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்துபவர்கள்; குழந்தைகள் ஆங்கிலக் கல்வி கற்கும்போது தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லையே என்று வருந்தும் இளம் அன்னைமார்கள்; ஆசிரியர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், என்று பலவிதமான மனிதர்கள்.

 

ஒவ்வொரு வகுப்பிலும். மனிதர்களைக் கையாளுவது எப்படி என்பதை எங்களைப் போன்ற ஆசிரியர்கள் முதலில் கற்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் வருவார்கள். அதை நான் பூர்த்தி செய்தால்தான் எனக்கு நல்ல பெயர் வரும். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும், வகுப்பு பற்றி,  ஆசிரியரைப் பற்றி மாணவர்கள் (feedback) எழுதிக் கொடுக்க வேண்டும். அதற்கென்றே சில கேள்விகளுடன் ஒரு படிவம் கொடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும். சில மாணவர்களுக்கு – அடிப்படை வகுப்பில் சேருபவர்களுக்கு அதைப் படித்து பதில் எழுதுவதே  கஷ்டமாக இருக்கும். நீளமான வாக்கியங்கள் எழுத வேண்டாம். எஸ், நோ அல்லது டிக் செய்ய வேண்டிய கேள்விகள் தான் இருக்கும். என்ன வேடிக்கை என்றால் ஆரம்பநிலை மாணவர்களுக்கு கேள்விகளை நான் படித்து பதில்களையும் நான் படித்து விளக்கவேண்டும். அப்போது ஒரு மாணவர் சொன்னார்: ‘மேடம்! எது பெஸ்ட் பதிலோ அதை நீங்களே டிக் செய்துவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் பெஸ்ட் டீச்சர்!’ என்று!

 

ஆங்கிலம் ஒரு கிறுக்கு மொழி என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும். அதுவும் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசும்போது I eat என்பது he, she, it போன்றவற்றுடன் சொல்லும்போது he eats, she eats, it eats என்று மாறும் இல்லையா? அடிப்படை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு இதைப்புரிய வைப்பதற்குள் எனக்கு கண்களில் நீர் இல்லையில்லை ரத்தமே வந்துவிடும். ஒருமுறை இதை விளக்கிவிட்டு ஒரு பெண்ணிடம் கேட்டேன். I eat, but my father……..? அவளுக்கு நான் கேட்பதே புரியவில்லை. மறுமுறை (பலமுறை!) விளக்கிவிட்டு பதில் சொல் என்றேன். கடைசியில் நானே சொன்னேன்: My father eats என்றேன். அவள் ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு கன்னட மொழியில் சொன்னாள்: நீங்க சொல்றது சரி மேடம். அப்பா பெரியவங்க. நிறைய சாப்பிடுவாங்க(!!!!????) அதனால ‘s’ சேர்த்துக்கொண்டு eats என்று சொல்லவேண்டும்!’ எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!

 

டாக்டர்கள் (என்னிடம் நான்கு டாக்டர்கள் ஆங்கிலம் கற்க வந்தனர்!), எம்.டெக்., எம்பிஏ படித்தவர்கள், பள்ளியில் ஆசிரியர் ஆக இருப்பவர்கள் என்று பலவித மாணவர்களை என் ஆசிரிய வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். படிப்பில் மிகச் சிறப்பாக மதிப்பெண்கள் எடுத்து நல்ல நிறுவனத்தில் வேலையும் ஆகியிருக்கும். ஆனால் ஆங்கிலம் பேச வராது. மைக்கோ-பாஷ் நிறுவனத்திலிருந்து ஒருவர் ஆங்கிலம் கற்க வந்திருந்தார். ‘என் சப்ஜெக்டில் என்ன கேட்டாலும் பதில் சொல்லுவேன். அதில் அவர்கள் மகிழ்ந்து போய் இன்னிக்கு சாயங்காலம் பார்ட்டிக்கு வரயா?’ என்றால் அப்படியே ஒதுங்கிவிடுவேன். பார்ட்டியில் ஆங்கிலத்திலில் பேச வேண்டுமே, அதனால்!’ என்றபோது மிகவும் வியப்பாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை கஷ்டமா என்று. தினசரி விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது என்பது அவர்களுக்குக் கடினமான விஷயம். இதைப்போல பல மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலசமயங்களில் நான் அவர்களிடம் வேடிக்கையாகச் சொல்லுவேன்: ‘பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலம் கற்காதீர்கள். நீங்கள் கற்றுக்கொண்டால் நான் எப்படிப் பிழைப்பது?’

 

மறக்கமுடியாத மாணவர்களில் சுரேந்திராவைப் பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். அவர் என் வகுப்பில் நுழைந்தவுடன் ஒருநிமிடம் நான் பயந்துபோனேன். அவரது வாட்டசாட்டமான உருவம் என்னுள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. அப்போது வகுப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதனால் மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லை. நான் மட்டும் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் உருவத்திற்கும் அவரது பணிவிற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது. அவரது பிரச்னையை அவர் சொல்லாமலேயே நான் முதல் வகுப்பிலேயே தீர்த்து வைத்தேன். அதனால் என்னுடன் பலநாட்கள் சிநேகிதம் போல பேசத்தொடங்கி விட்டார். அவரது பிரச்னை இதுதான்: அவரது நண்பர் இவருக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபருடன் வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நண்பரிடம் உன் கூட வந்திருக்கும் நபரின் பெயர் என்ன என்று எப்படிக் கேட்பது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்றைய வகுப்பில் அதுதான் பயிற்சியாக நான் வைத்திருந்தேன். அவருக்கும் அது தெரியாது;  எனக்கும் இதுதான் அவரது பிரச்னை என்று தெரியாது.

 

ஆரம்பத்தில் his, her என்று சொல்லிக்கொடுத்துவிட்டு நடைமுறைப் பயிற்சிக்கு இருவரைக் கூப்பிட்டேன். மூன்றாமவராக சுரேந்திரா எழுந்து வந்தார். நான் அவரிடம் இரண்டு நபரில் ஒருவரைக் காட்டி அவர் பெயர் என்ன என்று கேளுங்கள் என்றேன். அவர் உடனே, ‘what’s your name?’ என்றார். அந்த நபர்  பதில் சொன்னவுடன் அவரிடமே அவருடன் கூட இருக்கும் நபரின் பெயரைக் கேளுங்கள் என்றேன். சுரேந்திரா நேரடியாக இரண்டாம் நபரைப் பார்த்து, ‘what’s your name?’ என்றார். நான் உடனே ‘அப்படியில்லை; இவரிடம் அவரது பெயரைக் கேளுங்கள்’ என்றேன். ‘I don’t know, madam’ என்றார். ‘இப்போதுதானே சொல்லிக்கொடுத்தேன் ‘his’ என்ற வார்த்தையை. what is his name?’ என்று கேளுங்கள். அவ்வளவுதான்’ என்றேன்.

 

சுரேந்திரா கிட்டத்தட்ட அழும்நிலைக்கு வந்திருந்தார். ‘மேடம் நீங்கள் என்னவோ அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு இதுவரை இந்த உபயோகம் தெரியாது. நீங்கள் எனக்கு இன்று இதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். கண்ணைத் திறந்திருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய உபகாரம்!’ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். சின்னச்சின்ன விஷயங்கள் கூட அவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்று அன்று புரிந்துகொண்டேன்.

தொடரலாம்……

 

 

 

 

 

 

 

 

 

இங்கிலீஷ் விங்க்லீஷ்!

 

பத்துவருடங்கள் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுத்தது ரொம்பவும் நிறைவான அனுபவம். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு வகையான அனுபவம். எதைச் சொல்ல எதை விட?

 

நம்மூர் மாணவர்களுக்கு எல்லாவற்றையும் அவர்களது மொழியில் சொல்ல வேண்டும். கன்னட மாணவர்களுக்கு கன்னடதல்லி ஹேள பேக்கு. தமிழ்ல சொல்லுங்க – தமிழ் மாணவர்கள் கேட்பார்கள். ஹிந்தி மே போலியே மேடம் என்பார்கள் ஹிந்தி மாணவர்கள். தெலுகல் செப்பண்டி, மலையாளம் அறியுமோ? போன்றவைகளையும் அவ்வப்போது சமாளிக்க வேண்டும்.

 

ஒருமுறை அபுதாபியிலிருந்து ஒரு மாணவர். பிரைவேட் டியுஷன். (ஒரு மாணவர் – ஒரு ஆசிரியை) என்ன கேட்டாலும் ‘இன்-ஷா அல்லா’ என்பார். அல்லது ‘மாஷா அல்லா’ என்பார். அவர் நிறைய பேசுவார் – ஆங்கிலத்தில் இல்லை; உருதுவில்! அவர் என்னிடத்திலிருந்து ஆங்கிலத்தில் என்ன கற்றுக் கொண்டாரோ தெரியாது. நான் அவரிடத்திலிருந்து இன்-ஷா அல்லா, மாஷா அல்லா கற்றுக் கொண்டேன்!

 

ஆந்திராவிலிருந்து ஒரு பெண். படித்தது M.Tech. ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது இந்த மாணவிக்கு. ஒருநாள் என்னிடம் ‘Tomorrow going to father-in-law house’ என்றாள். எனக்கு வியப்பு. ‘Are you married?’ என்றேன். நோ, நோ மேடம், I am going to my mother brother house!’ அம்மாவின் சகோதரர் ஃபாதர் இன் லா! அதேபோல அப்பாவின் சகோதரி மதர் இன்லா! இது எப்படி இருக்கு? இந்த மாணவி எப்படி எம்.டெக் படித்து தேறியிருப்பாள் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.

 

father’s name, mother’s name என்பதெல்லாம் அடிப்படை வகுப்பு மாணவர்களுக்குப் புரியவே புரியாது. எம்.டெக் படித்த பெண்ணிற்கே புரியவில்லை என்றால் இவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு முறை ஒரு மாணவரை father’s name என்று சொல்லுங்கள் என்று சொன்னதற்கு எனக்கு ஒரு அப்பாதான் மேடம் என்றார்!!!!! S சேர்த்தால் அது பன்மைதான் அம்மாவாக இருந்தாலும், அப்பாவாக இருந்தாலும்!

 

இன்னொரு மாணவர். திருமணமானவர். மனைவியுடன் அமெரிக்கா செல்ல வேண்டும். ஆங்கிலத்தில் பேச வராது. மனைவி சொன்னார்: ‘அடிப்படை வகுப்பிலிருந்து இருக்கும் எல்லா வகுப்புகளிலும் படிக்கட்டும்’ என்று. அதனால் நான் எடுக்கும் எல்லா வகுப்புகளுக்கும் வருவார். எந்த வகுப்பிலும் வாயை மட்டும் திறக்கமாட்டார். கடைசி நாளன்று கூட ஆங்கிலத்தில் பேசாமல் என் பொறுமையை ரொம்பவும் சோதித்தார். ‘நீங்கள் இன்று பேசினால்தான் நான் மேற்கொண்டு வகுப்பை நடத்துவேன்’ என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சநேரம் யோசித்தார். மற்ற மாணவர்களும் அவரை பேசும்படி வற்புறுத்தவே ‘ஒன் ஸ்டோரி’ என்றவாறே எழுந்து வந்தார்.

 

‘டூ பிரெண்ட்ஸ். ம்…..ம்……ம்…. வென்ட் துபாய்…….ம்…..ம்…..ம்….  ஏஜென்ட் சீட் (cheat) ……ம்…..ம்….. பாதர் மதர் சூசையிடு…..’

 

நான் அவரை இடைமறித்தேன். இது ஆங்கிலமா? என்ன பேசுகிறீர்கள்?’ என்று கோபமாக ஆரம்பித்தேன். அவ்வளவுதான். ‘மேடம், ப்ளீஸ். ஸ்டோரி இன்டரஸ்டிங்! டோன்ட் டிரபிள்!(trouble) என்று ஆளுக்குஆள் சொல்ல (கத்த!) வகுப்பே எனக்கு எதிரியானது.

 

உண்மைதானே கதை புரிகிறது. சுவாரஸ்யமாக வேறு இருக்கிறது. யாருக்கு வேண்டும் is, are எல்லாம்?

இதோ நாடக நடிகர் மௌலி அவரது ப்ளைட் 172 நாடகத்தில் பேசுகிற ஆங்கிலத்தை ரசியுங்கள்!

 

 

என் மொழிப்புலமை 

வம்பு வேணுமா உமா?

ஹிந்தி மாலும்?

கன்னட கொத்து!

குழந்தைகள் பொய் சொல்லுவதில் பெற்றோரின் பங்கு?

செல்வ களஞ்சியமே 57

 

‘குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம், வெளியில் அழைத்துப் போகிறோம் எதற்கும் குறை வைப்பதே இல்லையே, அப்படியும் என் குழந்தை பொய் பேசுகிறதே’ என்று பெற்றோர்கள் விசனப்படுகிறார்கள்.

 

வகுப்பில் ஆசிரியை தேர்வு முடிந்தபின் தாள்களை மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர்களின் கையெழுத்து வாங்கி வரச் சொல்லுகிறார். ரவி மிகவும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். எப்போது கேட்டாலும் அப்பா ஊருக்குப் போயிருக்கிறார் என்கிறான். இவனது பையில் கையெழுத்திடாத தாள் இருப்பதை பார்த்த ஆசிரியை வகுப்பில் எல்லார் முன்னாலும் கோபிக்கிறார். ‘என்ன பெற்றோர்கள்’ என்று பெற்றோர்கள் மேல் அவரது கோபம் திரும்புகிறது.

 

வீட்டில் என்ன நடக்கிறது? ஏன் குறைந்த மதிப்பெண், நான் கையெழுத்துப் போடமாட்டேன் என்கிறார், தந்தை. தாயும் அதையே சொல்லும்போது ரவியால் என்ன செய்யமுடியும்? ஆசிரியையும் சரி, பெற்றோர்களும் சரி ஏன் குறைந்த மதிப்பெண் வாங்கினாய், அப்பா ஊரில் இல்லை என்று ஏன் பொய் சொல்லுகிறாய் என்று கோபிக்கிறார்களே தவிர, அவன் அந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண் வாங்க என்ன காரணம் என்று கேட்பதேயில்லை. ரவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்